புதன், அக்டோபர் 25, 2006

12 : ஹாலிவூட் திரைப்பட நிலைகள்

Your Ad Here

ஹாலிதிரைப்படங்களில் கடந்தவாரம் The Grudge 2 என்ற திரைப்படம் முதல் இடத்தைப்பிடித்ததுடன் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. இது பயங்கரமான திகில்படமாகும். 2004 ல் வெளிவந்த The Grudge என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகவே இந்தத்திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ஒரு ஜப்பானியர் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.


முதல் வாரத்தில் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது. கடந்தவாரம் முதல் இடத்தில் இருந்த The Departed திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இத்திப்பட நாயன் லியனார்டோ டிக்காப்பிரியோ என்பதும் குறிப்பிட வேண்டும். இத்திரைப்படம் வன்முறைகள் நிறைந்ததுடன் பாதாள உலகக் கோஷ்டிகளும் பொலீசும் மோதும் படமாகும்.


The Man of the year படம் மூண்றாம் இடத்தில் உள்ளது. சிறுவருக்கான அனிமேசன் திரைப்படமான Open Season நான்காம் இடத்தில் உள்ளது. இது தயாரிப்பு செலவுகளை இதற்குள் வசூலித்துவிட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.


11 : ஹாலிவூட் நட்சத்திரங்கள் இந்தியாவில்

Your Ad Here

A Mighty Heart என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹாலிவூட் நட்சத்திரங்கள் இந்தியாவின் புனே நகரில் முகாமிட்டுள்ளனர். இதனால் இந்த நகரம் வழமையைவிட பரபரப்பாகியுள்ளது. உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல பத்திரிகைக்காரர்கள் இங்கு வந்து குவிந்துள்ளனர். இவர்களிடமிருந்து தப்ப திரைப்படக் குழுவினர் தனியார் பாதுகாப்பு சேவையைப் பயன்படுத்துகின்றர்.

இந்த திரைப்படத்தில நட்சத்திரத் தம்பதிகளான் பிரட் பிட் மற்றும் அஞ்சலீனா ஜோலீ நடிப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் கதை பாக்கிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் கதையாகும்.

அமைதியான புனே நகரம் இப்படப்பிடிப்பால் மிகவும் பரபரப்பாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

புதன், அக்டோபர் 11, 2006

10 : தனது கைது பற்றி மனம் திறக்கிறார் Mel Gibson

Your Ad Here

பிரபல ஹாலிவூட் நடிகரான மெல் கிப்சன் கலிபோனியாவில் மது போதையில் வாகனம் ஓட்டும் போது கைது செய்யப் பட்டார். இது பற்றிய தகவல்களையும் இவர் கைது செய்யும் போது பொலீஸ் ஆபீசரிடம் கூறிய வார்த்தைகளையும் அறிய கிளிக் செய்க..

மேலும்.

செவ்வாய், அக்டோபர் 10, 2006

9 : The Phantom of the Opera (2004) (1925)

Your Ad Here
Phantom of the Opera ஒரு பிரபலமான அமெரிக்கத் திரைப்படமாகும். திரைப்படம் முதலில் 1925 ல் எடுக்கப்பட்டாலும் இது பல தடவை மீளாக்கம் (Remake) செய்யப்பட்டது. இறுதியாக 2004 ல் இத்திரைப்படத்தின் புதிய பதிப்பு ஒன்று எடுக்கப்பட்டது.


இக்கதையின் படி ஒரு கோர முகம் கொண்ட வேதாளம் போன்ற மனிதன் ஒன்று பிரான்ஸ், பரிஸ் ஒபேரா மண்டபத்தை கலக்கியடிக்கின்றது. உண்மையில் கிறிஸ்ரைடன் எனும் அழகிய இளம் ஒபேரா பாடகியின் மீதும் அவளின் மோகனமான குரல் மீதும் காதல் கொள்ளும் இந்த வேதாளம் (உண்மையில் ஒரு மனிதன் தான்) அவளைக் காதலிக்கத் துடிக்கின்றது. கோர முகம் கொண்டாலும் ஒபேரா பாடல்களைப் பாடுவதில் இந்த முகமூடி போட்ட கோரமுகம் சிறப்பானது. முதலில் தன் ஆசை நாயகி கிரிஸ்ரைனி்ற்கு பாடல் பாடக் கற்றுக் கொடுக்க முடிவெடுக்கின்றது. அவளிற்கு பயிற்சியும் அளிக்கின்றது. அவள் மெல்ல மெல்ல ஒபெரா ஹவுசில் பெரிய பாடகியாக வர வழி சமைக்கின்றது. ஒபேராவின் பிரதான பாடகி வெளியேறவும் இவள் (Christine) முண்ணனியில் பாடவும் இந்த மர்ம முகமூடி மனிதன் காரணமாகின்றான்.

கிரிஸ்ரைன் உண்மையில் இந்த கோர உருவத்தைக் காதலிக்க வில்லை. இவள் தன் காதலனின் உதவியுடன் கோரமுக நபரை ஏமாற்ற முயல்கின்றாள். அதாவது அவனிடம் இருந்து தப்பி தன் ஆசை நாயகனுடன் வாழ விரும்புகின்றாள். ஆயினும் முயற்சி செய்யும் ஒவ்வொரு தடவையும் இவளும் காதலனும் கோர முக நபரிடம் தோற்றுவிடுகின்றனர்.


உண்மையில் இந்த கோர முகமுடைய நபரின் பின்னாலும் ஒரு சோகக் கதை இருந்தது. இவனை நரகத்தின் புதல்வன் என்று பார்வையாளர்களிடம் காட்டி அதன் மூலம் சிலர் சம்பாதித்து வந்தனர். அங்கே இவனுக்கு அடி உதை தொடக்கம் சவுக்கடி வரை நடந்தது. அங்கிருந்து தப்பிய இவர் இந்த பாரிஸ் ஒபேரா ஹவுசில் ஒளிந்து கொள்கின்றான். சிறு வயதிலேயே இங்கு வந்து ஒளிந்து விட்டாலும் இங்கேயே தனது வாழ்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்றான்.

1925 ல் எடுத்த திரைப்பட DVD பெறுவது கடினம் தான் எனினும் தற்போதய ரீமேக்கைப் பார்க்கலாம். கலையார்வம் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம். பிரமாண்டமான மேடையமைப்பு ஹொலிவூட் படம் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துகின்றது.

படத்தின் கணிசமான பகுதி பாடல்களாகவே நகர்கின்றன (ஒபேராப் பாணியிலான பாடல்கள்). உதாரணத்திற்கு ஒரு வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள். இந்தப் பாடலில் முகமூடி மர்ம மனிதன் அல்லது அந்த கோர முகமுடைய மனிதன் தன் பாடல் வலிமையால் நாயகியை மயக்கி தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கின்றான். செல்லுமிடங்களில் படத்தின் பிரமாண்டத்தைக் காணலாம். குகைகள் போன்ற அமைப்புகளூடு இவன் தன் இரகியப் பிரதேசத்திற்கு நாயகியை அழைத்துச் செல்கின்றான். இந்தப்பாடல்தான் எனக்கு இந்தப் படத்தில் மிகப்பிடித்த பாடல். இந்தப் பாடலின் பெரும்பகுதி இருட்டாகத் தெரிந்தாலும் சற்றே உற்றுப் பாருங்கள். அழகிய பிரமிக்க வைக்கும் பின்ணணிக் காட்சிகளைக் காணலாம்.





கட்டாயம் நேரம் கிடைத்தால் இப்படத்தை பாருங்கள். ஒரு கலைத் தாகம் தணித்த சுகம் கிடைக்கும். நீங்கள் தமிழ் திரைப்படங்களிலேயே பாடல்களை வெறுப்பவராயின் இது உங்களுக்கு உரிய படம் இல்லை.

வியாழன், அக்டோபர் 05, 2006

8 : X-Men: The Last Stand(2006) - DVD வெளியீடு

Your Ad Here
Photobucket - Video and Image Hosting

X-Men: The Last Stand பரப்பரப்பான திரைப்படம் இன் மூன்றாம் பாகம் டிவிடி(DVD) யில் வெளிவந்து விட்டது. இப்பாகத்தில் மரபணு விகாரமடைந்தவர்கள் (mutants) இரண்டு தெரிவிற்கிடையில் மாட்டுப்படுகின்றனர். அதாவது குணம் பெற்று மனிதராவது அல்லது தொடர்ந்து விகாரிகளாக இருப்பது. இரண்டு தெரிவிலும் நிறைகளும் குறைகளும் இருக்கின்றன.

என்னதான் நடக்கின்றது என்பதை DVD இல் பாருங்கள்..

மேலும்..

Google Search

புதன், அக்டோபர் 04, 2006

7 : ஹரிபோட்டர் (Harry Potter) நாயகனின் மறுபக்கம்

Your Ad Here

ஹரிபோட்டர் (Harry Potter) திரைப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டது யாம் அறிந்ததே.. இத்திரைப்படத்தின் பின்னர் இந்தத் திரைப்பட நாயகன் பெருமளவு இரசிகர்களைப் பெற்றதுடன் பெரிதும் மதிக்கப்பட்டார்.

இவரின் மறுபக்கம் வெளிவந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரின் இரசிகர்கள் நடந்ததை நம்ப முடியாமல் தவிக்கின்றனர்..
என்னதான் நடந்தது??

கிளிக் செய்து பாருங்கள்...

செவ்வாய், அக்டோபர் 03, 2006

6 : த நைட் லிசனர்

Your Ad Here
நைட் லிசனர் திரைப்படம் பற்றி முத்து ஸ்ரீனிவாசன் எழுதுகின்றார் வாசித்துத்தான் பாருங்களேன்...
அன்புடன்,
ஜெ.மயூரேசன்

திங்கள், அக்டோபர் 02, 2006

5 : ஸ்டே

Your Ad Here
திரைப்படம் பற்றி முத்து சிறீனிவாசன் எழுதுகின்றார். வாசித்துத்தான் பாருங்களேன்....

Click here to read

ஞாயிறு, அக்டோபர் 01, 2006

4 : Goal! The Dream Begins (2005)

Your Ad Here
கோல் என்றால் இலக்கு என்று பொருள்படும். இந்தக் கதையும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு இளைஞனைப்பற்றிய கதையே ஆகும்.

மெச்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு களவாக குடி பெயர்கின்றது சன்டியாகோவின் குடும்பம். சன்டியாகோவின் தாயார் சிறு வயதிலேயே வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறிவிட தந்தையின் வளர்ப்பிலே சன்டியாகோவும் அவன் தம்பியும் வளர்கின்றனர். இவர்களுக்கு ஒரு பேத்தியாரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



மெச்சிக்கோவில் இருந்து வெளியேறி அமெரிக்காவினுள் நுழையும் தறுவாயில் அமெரிக்க எல்லைக் காவல் படையிடம் இருந்து மயிர் இழையில் இந்தக் குடும்பம் தப்புகின்றது. தப்பும் வேளையில் அந்தச் சிறுவனுக்கு கால்பந்தாட்டம் மீது இருக்கும் நாட்டத்தைக் காட்ட சிறு காட்சி ஒன்றைச் சேர்த்துள்ளார்கள். அதாவது இவர்கள் எல்லையில் உள்ள வேலியைக் கடந்து அமேரிக்காவினுள் நுழையும் தறுவாயில் மெச்சிக்கோப் பக்கம் சிறுவனின் பந்து விழுந்து விட அதைவிட்டு விட்டு வர மனமில்லாமல் தடுமாறுகின்றான். இருந்தபோதும் தந்தையின் அதட்டலுக்குப் பயந்து பந்தை விட்டு வருகின்றான். அப்போது அவன் முகத்தில் தெரியும் ஏமாற்றம் பாருங்கள்.......

பத்து வருடங்களின் பின்பு லாஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் இந்தக் குடும்பம் தங்கிவிட்டபோதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருக்கின்றது. இதே வேளையில் அந்தச் சிறுவன் தற்போது இளைஞனாகி நிற்கின்றான். அவனுக்குள் ஆசைகள் இருக்கின்ற போதும் தந்தை அவனது ஆசைகளை நோக்கி கனவுகளை வளர்க்க விடுவதில்லை. அப்துல் கலாம் கூறிய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற வாக்கியம் அவன் தந்தைக்குப் புரியவில்லை.

ஒரு ஏழைக் குடும்ப வாலிபன் தான் தன்னை மீறி கனவு காணக்கூடாது என்பதே அவரது வாதம். பல தடவை தந்தை மகனை இந்த விடயத்தில் கண்டிக்கின்றார்.

இதே வேளையில் இந்த இளைஞன் சன்டியாகோவின் கால்ப் பந்தாட்ட விளையாட்டுத் திறமையைப் பார்த்த இங்கிலாந்துக் காரர் ஒருவர் அவனுக்கு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். அவரின் முயற்சகள் தோல்வி அடையவே சன்டியாகோவை இங்கிலாந்துக்கு வருமாறும் அப்படி வந்தால் தான் சந்தர்ப்பத்தை வாங்கித் தருவதாககும் கூறி விடை பெறுகின்றார்.

கனவுகளில் மீண்டும் மிதக்கும் இளைஞனுக்கு அவனது தந்தை கட்டுப்பாடு போடுகின்றார். இது வீண் கனவு என்றும் தன்னைப்போல தன் மகனும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.



தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து செல்வதற்காக சன்டியாகோ பணம் சேர்க்கத் தொடங்குகின்றான். ஆயினும் சேர்த்த பணம் எல்லாம் அவனது தந்தை ஒரு ட்ரக் வேண்டப் பயன்படுத்தி விடுகின்றார். அனைத்தும் வெறுத்துப் போய் விரக்தியுடன் உலாவும் இந்த இளைஞன் அவனது பாட்டியின் உதவியுடன் தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து பயணம் ஆகின்றான்.

இங்கிலாந்தில் இளைஞன் தனது வெற்றிக்காக உழைப்பதையும் இறுதியில் ஒரு வெற்றிகரமான தொழில் ரீதியான கால்பந்தாட்ட விளையாட்டு வீரனாக மாறினானா என்பதுமே மிகுதிக் கதை.

இது வாழ்கையில் துவண்டு போய் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இளைஞர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க இந்தப்படம் உதவி செய்யலாம்.

இங்கிலாந்தில் அந்த இளைஞன் படும் துன்பம் இருக்கின்றதே பாருங்கள். அளவிட முடியாது. அவன் பிரகாசிக்க முடியாமல் திணறுவதையும் அவன் கற்பனைகள் கரைவதையும் பார்க்கும் போது எமக்கும் தான் கவலை ஏற்படுகின்றது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் அவன் முயற்சிகள் பயனளித்ததா என்பதை திருட்டு டீவிடீ வேண்டியாவது பாருங்கள்.

திரையில் நாயகன் நடிப்புடன் கொஞ்சம் திணறுவதைக் காண முடிகின்றது. ஆனால் கால் பந்துடன் சுழன்று சுழன்று கலக்குகின்றார். ஆயினும் மற்றய துணை நடிகர்களின் நடிப்பாற்றலால் நாம் இவரின் குறையைக் கண்டு கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இங்கிலாந்திற்கு இவரை அழைக்கும் முன்னய கால்பந்தாட்ட வீரர் மற்றும் சன்டீயாகோவின் காதலி போன்றோர் நடிப்பில் கலக்குகின்றனர்.

இத்திரைப்படம் ஆரம்பத்தில் இயக்குனர் மைக்கல் வின்டர் பொட்டம் என்பவருடனே ஆரம்பித்தது. ஆயினும் அவர் இதிலிருந்து விலகிக்கொண்டார். காரணம் இந்த திரைப்படத்தில் உண்மையான கால்பந்தாட்ட கழகங்களின் பெயர் பயன்படுவதால் பீஃபா (FIFA) தன் அனுமதியைப்பெற வேண்டும் என்று கூறிவிட்டது. கோபப்பட்ட மனுசன் விட்டுட்டுப்போய்விட்டார்.

இத்திரைப்படத்தின் மிகுதி 2 பாகங்கள் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

பிகு : இந்த திரைப்படத்தில் பிரபல கால்பந்தாட்ட வீரர், முன்னய இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் பெக்காம் ஒரு காட்சியில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 : த டாவின்சி கோட்

Your Ad Here
Photobucket - Video and Image Hosting
2000 ம் ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள இரகசியம். இது வெளியானால் மனித விழுமியத்தின் ஆணி வேர் ஆட்டம் காணும். இது தான் த டா வின்சி கோட் திரைப்படத்தின் உள்ளடக்கம். திரைப்படமும் சரி நாவலும் சரி பெரியளவில் சர்ச்சைக்குள்ளானது. காரணம் கதையில் பயன் படுத்தப்பட்ட ஒரு புனிதர் உலக அளவில் அதிகமானோர் மதிக்கும் யேசுநாதர்.

டாம் ஹாங் சின்னங்கள் (Symbols) பற்றிய ஆராய்ச்சி செய்யும் ஒரு அமேரிக்கப் பேராசிரியர். பாரிசுக்கு ஒரு விரிவுரை நிகழ்த் வந்த இடத்தில் விதி விளையாட ஆரம்பிக்கின்றது.

பாரிஸ் அருங்காட்சியத்தில் நூதனப் பொருட்களின் காப்பாளராக பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். இறந்த நூதனசாலை பணியாளர் தன் நெஞ்சில் நட்சத்திரக்குறி போன்ற தடயங்களை கீறி விட்டு மரணித்து விடுகின்றார். பாரீஸ் காவல் துறை டாம் ஹாங்கின் உதவியை நாடுகின்றது. பின்பு இறந்தவரின் பேத்தியுடன் சேர்ந்துகொள்ளும் டாம் ஹாங் பல புதிர்களை ஒன்றின் பின் ஒன்றாக விலக்குகின்றார். இதே வேளையில் காவல்துறையின் சந்தேகம் டாம் ஹாங்கின் பக்கம் திரும்புகின்றது. இப்படியாக கதை நகர்கின்றபோது யேசு நாதருக்கு சந்ததி உள்ளமை தெரிய வருகின்றது.

இதற்கிடையில் யேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாக பாதுகாக்க இன்னுமொரு குழுவும் அலைந்து திரிகின்றது. இதில் முன்னைய குழுவால் டாம் ஹாங்கும் நாயகியும் துரத்தப்படுகின்றனர். நம்பிக்கை நம்பிக்கைத் துரோகம் என்று கதை விறு விறுப்பாக நீள் கின்றது.

கதையின் இறுதியில் தற்போதைய வாரிசு யாரேன்று தெரியவருகின்றது (அதை இங்கு கூறினால் நீங்கள் படம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை).
ஒவ்வொரு கட்டத்திலும் பல வரலாற்று உண்மைகளை கதையுடன் இணைத்துள்ளவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக டா வின்சியின் இறுதி இராப்போசனம் சித்திரத்தில் செய்யப்படும் வெட்டுக் கொத்து (நம்ப முடியாமல் நானும் போடோ ஷாப்பில் செய்து பார்த்தேன் சரியாகத் தான் பொருந்துகின்றது).

ஏது எவ்வாறாயினும் இப்படி யொரு படம் எடுக்கத் துணிவு, நிறைந்த படைப்பாற்றல் நிச்சயம் வேண்டும். கிறீஸ்தவர்களின் மனதை இப்படம் புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இலங்கையில் இப்படத்தை தடைசெய்து விட்டார்கள் (திருட்டு VCD ல் பார்த்தேன்). எனக்கென்னவோ மற்றவாகளின் உணர்வுகளுடன் விளையாடுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை அதற்காக கதையை இரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

2 : சால் வீ டான்ஸ் (2004)

Your Ad Here

பரபரப்பான சிக்காகோ நகரத்தைக் காட்டுவதுடன் இந்தத்திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இங்கு கதையின் முக்கிய பாத்திரமான யோன் கிளாக் ஒரு கணக்கியலாளர். அளவுக்கதிகமாக வேலை செய்து வேலை செய்து கிட்டத்தட்ட விரக்தி அடைந்து விட்ட ஒரு கணக்கியலாளர்.

ஒவ்வொரு நாளும் இவர் வேலை முடிந்து மின்சார இரயிலிலே வீடு திரும்பும் வழியில் ஒரு நடனப் பள்ளியைக் காண்கிறார். அதன் ஜன்னல் ஓரத்தில் நிற்கும் ஒர அழகுப் பதுமையையும் (ஜெனிபர் லோபெஸ்) காண்கிறார்.

இந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கிளார்க் அந்த நடனப் பள்ளியில் போல் ரூம் நடனம் கற்றுக்கொள்ளச் சேர்கின்றார். அந்த பள்ளியில் பிரதான ஆசிரியையான மிற்சி என்பவரின் கீழ் நடனம் பயில ஆரம்பிக்கும் இவர் தன் கண்களைக் கவர்ந்த அந்த அழகுப் பெண்ணின் பெயர் போலீனா எனவும் அவர் அந்த நடனப் பள்ளியில் உதவி ஆசிரியர் எனவும் அறிந்து கொள்கிறார்.

வெறுமனே சேர்ந்த நடனத்தில் கிளார்க் காலப்போக்கில் ஒன்றி விடுகின்றார். இதற்கிடையில் இவரின் அலுவலக நண்பர் ஒருவரும் அங்கே நடத்துறையில் இருப்பதை அறிந்து கொள்கின்றார். ஆயினும் அந்த நண்பர் தன்னை வெளி உலகிற்கு ஒரு விளையாட்டு இரசிகனாக மட்டுமே காட்ட விழைகின்றார். இவரும் கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாகின்றார்.

ஆரம்பத்தில் கிளார்க்கை நிராகரித் போலீனா பின்பு மெல்ல மெல்ல அவரை நெருங்கத் தொடங்குகின்றார்.

காலப் போக்கில் கிளார்க்கிற்கு சிக்காகோ கிரிஸ்டல் போல் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் கட்டாயம் ஏற்படுகின்றது. இதே வேளையில் கிளார்கின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் அவரின் மனைவி ஒரு தனியார் துப்பறிவு நிபுனர் மூலம் கணவரின் இரகசியமான நடன வகுப்புகள் பற்றி அறிந்து கொள்கின்றார்.

போட்டியிற்கு கிளார்க் அவரது ஆசிரியை மிட்சி மற்றும் போலீனாவால் பயிற்று விக்கப்படுகின்றனர். கடைசியாக ஒரு தடவை போலீனாவால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்போது உருவாக்கப்பட்ட நடனக்காட்சிகள் பார்ப்பவரை ஆட்கொள்ளுமாறு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடனப் பயிற்சியின் போது நடனம் பற்றி போலீனா சொல்லும் சில கருத்துக்களும் அழகானவை. உதாணத்திற்கு அவள் படம்ஆவாள் நீ அதைத் தாங்கும் சட்டமாவாய் நீ செய்வதை அவள் அப்படியே பிரதிபலிப்பாள். இது நடனத்தைப் பற்றி போலீனா கூறுவது.

இறுதியாக கிளார்க் இரகசியமாக வந்த சிக்காகோ போல்ஸ் டான்ஸ் போட்டியில் அவரின் மனைவியும் மகளும் அவரிற்கு தெரியாமல் வந்து அமர்ந்து கொள்கின்றனர். இவர் நடனமாடிக்கொண்டு இருக்கும் போதே தனது துணைவியாரையும் மகளையும் காண்கின்றார். இதன் பின்பு கணவன் மனைவிக்கிடையில் கடும் சண்டை வெடிக்கின்றது.

மனைவியுடன் தொடர்ந்து வாழ்ந்தாரா கிளார்க் அல்லது போலீனாவுடன் சென்றாரா? நடனப் போட்டியில் கிளார்க் வெற்றி பெற்றாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகாண திரைப்படத்தைப் பாருங்கள்.

இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவலாகும். நடுத்தர வயதினரை கவரும் என்பது என் கணிப்பு. எது எவ்வாறாயினும் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த திருப்தி வேண்டு மென்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். அதிரடி ஆக்ஷன் திரைப்பட இரசிகர்களிற்கான திரைப்படம் இது வல்ல என்பதையும் கருத்தில் கொள்க.

1 : ஹாலிவூட் பார்வை

Your Ad Here
நாம் அன்றாடம் பல்வேறு திரைப்படங்களைப் பார்க்கின்றோம். அதில் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழித் திரைப்படங்கள் அடங்குகின்றன. குறிப்பாக தமிழ் திரைப்படங்களுக்கு பல்வேறு வலைப்பதிவர்கள் தொடக்கம் இணையத்தளங்கள் வரை தமிழில் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் ஹாலிவூட் திரைப்படங்களிற்கு இவ்வாறான விமர்சனங்கள் தமிழில் வருவது மிகக் குறைவு.

இதை நிவர்த்தி செய்யுமுகமாக நான் பார்க்கும் ஹாலிவூட் திரைப்படங்களிற்கு விமர்சனத்தை எழுதும் நோக்கில் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கின்றேன். பழையது புதியது என பல்வேறு ஹாலிவூட் திரைப்படங்களின் விமர்சனமும் இங்கு இடம் பெற இருக்கின்றது என்பதை அறியத்தருகின்றேன்.

எனது மற்றய வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருக்கும் ஹாலிவூட் திரைப்பட விமர்சனங்களை முதற்கட்டமாக இங்கே நகர்த்துகின்றேன். பின்னர் புதியதாக எழுதும் விமர்சனங்கள் இங்கேயே இடம்பெறும்.

ஹாலிவூட் திரைப்படங்கள் முதல் ஹாலிவூட் கிசு கிசு வரை எழுதுவதாக உத்தேசம்.......என்ன உங்களிற்கு சம்மதம் தானே???? ஆம் என்றால் இன்னும் என்ன தயக்கம் வாங்க ஹாலிவூட் போகலாம்!